திருவள்ளுவர் காட்டும் சான்றோர் அறவோர் - காட்சி யவர். கோள்.

 திருவள்ளுவர் காட்டும் சான்றோர் அறவோர் - காட்சி யவர். கோள்.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். குறள் 699: மன்னரைச் சேர்ந்தொழுதல். 
மணக்குடவர் உரை:யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.).
மு. வரதராசன் உரை:அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
மு. கருணாநிதி உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். குறள் 654:  வினைத்தூய்மை. 
மணக்குடவர் உரை:துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.).
மு. வரதராசன் உரை:அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
மு. கருணாநிதி உரை:தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை: தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.  குறள் 258: புலான்மறுத்தல். 
மணக்குடவர் உரை:குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.
பரிமேலழகர் உரை:செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.).
மு. வரதராசன் உரை:குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
மு. கருணாநிதி உரை:மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

பயனில சொல்லாமை. குறள் 199:

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

மணக்குடவர் உரை:
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

பரிமேலழகர் உரை:
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது).

மு. வரதராசன் உரை:
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

மு. கருணாநிதி உரை:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

ஒப்புரவறிதல். குறள் 218:

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

மணக்குடவர் உரை:
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

மு. கருணாநிதி உரை:
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

சாலமன் பாப்பையா உரை:
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

இன்னாசெய்யாமை.

குறள் 311:

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மணக்குடவர் உரை:
மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

மு. கருணாநிதி உரை:
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Translation:
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.

Explanation:
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

குறள் 312:

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மணக்குடவர் உரை:
தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

பரிமேலழகர் உரை:
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

மு. கருணாநிதி உரை:
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

சொல்வன்மை. குறள் 646:

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

மணக்குடவர் உரை:
தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:
வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

மு. கருணாநிதி உரை:
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

வினைத்திட்பம். குறள் 662:

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

மணக்குடவர் உரை:
வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.

பரிமேலழகர் உரை:
ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்தில

மு. வரதராசன் உரை:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

மு. கருணாநிதி உரை:
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

Comments

Popular posts from this blog

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன

திருக்குறள் காட்டும் ஷத்திரியருக்கான அறம்

திருக்குறள்- சங்கத் தமிழர் மரபில் வேதங்களும் பிராம‌ணர்க‌ளும்