வள்ளுவத்தின் அடிப்படை மெய்யியல்
வள்ளுவத்தின் அடிப்படை மெய்யியல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. குறள் 1: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிமேலழகர் உரை:எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
மு. வரதராசன் உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
கலைஞர் உரை:அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
பரிமேலழகர் உரை:கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
கலைஞர் உரை:தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
பரிமேலழகர் உரை:இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்¢னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)
மு. வரதராசன் உரை:கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
கலைஞர் உரை:இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. குறள் 9: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்
பரிமேலழகர் உரை: கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
மு. வரதராசன் உரை:கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
கலைஞர் உரை:உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10:
மணக்குடவர் உரை:பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய்¢ கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)
மு. வரதராசன் உரை:இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
கலைஞர் உரை:வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் 350: துறவு.
மணக்குடவர் உரை:பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு. (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
மு. கருணாநிதி உரை:எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. குறள் 377: ஊழ்.
மணக்குடவர் உரை:விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.).
மு. வரதராசன் உரை:ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
மு. கருணாநிதி உரை:வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
பரிமேலழகர் உரை:இல்லறவியல் சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
கலைஞர் உரை:சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.
சாலமன் பாப்பையா உரை:அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை:பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
பரிமேலழகர் உரை:அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
கலைஞர் உரை:பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை:ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
பரிமேலழகர் உரை:வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
கலைஞர் உரை:பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. குறள் 24: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
பரிமேலழகர் உரை:உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.).
மு. வரதராசன் உரை:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
கலைஞர் உரை:உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
சாலமன் பாப்பையா உரை:மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
இந்திரனே சாலுங் கரி. குறள் 25: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.
பரிமேலழகர் உரை:ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.
மு. வரதராசன் உரை:ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
கலைஞர் உரை:புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
சாலமன் பாப்பையா உரை:அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
வகைதெரிவான் கட்டே உலகு. குறள் 27: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.
பரிமேலழகர் உரை:சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
கலைஞர் உரை:ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
சாலமன் பாப்பையா உரை:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
மறைமொழி காட்டி விடும். குறள் 28: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).
மு. வரதராசன் உரை:பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
கலைஞர் உரை:சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
சாலமன் பாப்பையா உரை:நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.
பரிமேலழகர் உரை:ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.).
மு. வரதராசன் உரை:ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
கலைஞர் உரை:ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.
சாலமன் பாப்பையா உரை:தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கலைஞர் உரை:அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.
பரிமேலழகர் உரை:பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது. (பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய் நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
மு. கருணாநிதி உரை:அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
பரிமேலழகர் உரை:ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
மு. கருணாநிதி உரை:துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.
பரிமேலழகர் உரை:ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.).
மு. வரதராசன் உரை:மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
மு. கருணாநிதி உரை:நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். குறள் 19: வான்சிறப்பு.
மணக்குடவர் உரை: தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.
பரிமேலழகர் உரை: வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)
மு. வரதராசன் உரை: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.
கலைஞர் உரை: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
சாலமன் பாப்பையா உரை: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
மணக்குடவர் உரை:சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.
பரிமேலழகர் உரை:வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
மு. வரதராசன் உரை:மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
கலைஞர் உரை:வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.
சாலமன் பாப்பையா உரை:மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
பரிமேலழகர் உரை:எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
மு. கருணாநிதி உரை:ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.
சாலமன் பாப்பையா உரை:எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.
பரிமேலழகர் உரை:வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.).
மு. வரதராசன் உரை:ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
மு. கருணாநிதி உரை:விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.
சாலமன் பாப்பையா உரை:பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை:நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.
பரிமேலழகர் உரை:ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).
மு. வரதராசன் உரை:ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
மு. கருணாநிதி உரை:இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
மேற்சென்று செய்யப் படும். குறள் 335: நிலையாமை
மணக்குடவர் உரை:நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.).
மு. வரதராசன் உரை:நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
மு. கருணாநிதி உரை:வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
பரிமேலழகர் உரை: குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.).
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
மு. கருணாநிதி உரை:உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை
மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
பரிமேலழகர் உரை:சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
மு. கருணாநிதி உரை:நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
சாலமன் பாப்பையா உரை: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340: நிலையாமை
மணக்குடவர் உரை:தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.).
மு. வரதராசன் உரை:(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
மு. கருணாநிதி உரை:உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. குறள் 343: துறவு
பரிமேலழகர் உரை:ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.).
மு. வரதராசன் உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
மு. கருணாநிதி உரை: ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
சாலமன் பாப்பையா உரை:ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
உண்மை யறிவே மிகும். குறள் 373: ஊழ்.
மணக்குடவர் உரை:நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
பரிமேலழகர் உரை:நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.).
மு. வரதராசன் உரை:ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
மு. கருணாநிதி உரை:கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).
தெள்ளிய ராதலும் வேறு. குறள் 374: ஊழ்.
மணக்குடவர் உரை:செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.
பரிமேலழகர் உரை:உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.).
மு. வரதராசன் உரை:உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
மு. கருணாநிதி உரை:உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
சூழினுந் தான்முந் துறும். குறள் 380: ஊழ்.
மணக்குடவர் உரை: ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.
பரிமேலழகர் உரை: மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
மு. கருணாநிதி உரை: இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
சாலமன் பாப்பையா உரை: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
Comments
Post a Comment